வெள்ளி, 8 அக்டோபர், 2010

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவே ஐ.தே.கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை..!

சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தின்மீது சேறு பூசவதையும், அபகீர்த்தியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுதான் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக ஐ.தே.க.வினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டி ருக்கும் சகல குற்றச் சாட்டுக்களை யும் நாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வினர் சபைக்குக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழுவை நியமிப்பதைத் தவிர்ப்பதற்கும், ஜி.எஸ். பி. பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் கிடைப்பதற்கு வழி செய்ய நடவடிக்கை எடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தவறியுள்ளார். அதனால், அவர் அமைச்சராக தொடர்ந்து செயலாற்றுவதில் இச்சபை நம்பிக்கை இழந்துள்ளதெனக் குறிப்பிட்டு ஐ.தே.க. எம்.பிக்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபைக்குக் கொண்டு வந்திருந்தனர். இப்பிரேரணை மீதான விவாதத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி ஏற்று ஆறுமாதங்கள் கூட நிறைவுறவில்லை. அதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வினர் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர். இது நாட்டின் மீதுள்ள பற்றினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்ல. இது உள்நோக்கத்துடன் வெளிநாடுக்கு காண்பிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு பிரேரணையாகும். கல்வி அமைச்சருக்கு எதிராகவோ, சுகாதார அமைச்சருக்கு எதிராகவோ அல்லது வேறு அமைச்சர் ஒருவருக்கு எதிராகவோ நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கலாம். அதனை அவர்கள் செய்யவில்லை. ஏனென்றால் வெளி விவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை என்றால் தான் சர்வதேச மட்டத்தில் அது பேசும் பொருளாக மாறும் அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் அற்ப இலாபம் பெற்றுக் கொள்ளலாம் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இது தூர நோக்கற்ற முறையில் கொண்டு வரப்பட்டிருக்கும் பிரேரணையாகும். இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இப் பிரேரணை படுதோல்வி அடைவதுடன், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், அடைந்து கொள்ள, ஐ.தே.க. எதிர்பார்த்திருக்கும் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக