நாடாளுமன்ற சபைக் குழுப் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை நியமிப்பதற்கு முன்னரே அவர்கள் அதனை நிராகரிப்பார்கள் என தனக்குத் தெரியும் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், 18ஆவது அரசமைப்புத் திருத்தத்திற்கு உள்நாட்டில் மாத்திரம் இன்றி வெளிநாட்டிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு கேம்பிரிச் பிளேஸில் நேற்றுமாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சபைக் குழுவிலிருந்து சுமந்திரன் விலகிச் சென்றால் அரசமைப்பிலுள்ள சரத்தின்படி ஜனாதிபதி அவரை நீக்கிவிடுவார். பின்னர் நான் மற்றுமொருவரை நியமிப்பேன். அவரும் விலகிச் சென்றால் ஜனாதிபதி அவரையும் நீக்கிவிடுவார். அரசமைப்புத் திருத்தம்மூலம் எங்களை சிறைவைக்க அரசு ஒருவார காலக்கெடு வழங்கியது. ஆனால் நான் இப்போது அரசைச் சிறைவைத்துள்ளேன். 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தை சர்வதேச நாடுகளும் எதிர்க்கின்றன. அமெரிக்கா சமீபத்தில் 18ஆவது அரசமைப்பு திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது என கருத்துத் தெரிவித்தது. அமெரிக்காவின் இந்தக் கருத்தை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கண்டித்திருந்தார். ஐ.நா. செயலாளர் பான்கீ மூன் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமித்த குழுவை எதிர்த்து அரசு போர்க்கொடி தூக்கியது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஐ.நா. நிபுணர் குழுவுக்கு அரசு எதிர்ப்புத் தெரிவித்தது போல் சர்வதேச நாடுகளும் 18ஆவது அரசமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும். சர்வதேச சிவில் மற்றும் ஜனநாயக உரிமைகள் சாஷனத்தில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள் என்ற ரீதியில் ஒரு நாட்டில் ஜனநாயகம் மீறப்படும்போது அது தொடர்பாக மற்றுமொரு நாடு கேள்வி எழுப்ப முடியும். ஏற்கனவே சர்வதேச ரீதியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள 18ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் தெளிவு கொள்ள வேண்டும் என்பதற்காவே நான் இதனைத் தெரிவிக்கிறேன். என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக