ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த ஒரு திட்டத்தை பிரதமர் அபிசிட் நிராகரித்துள்ளார்

தாய்லாந்தில் நீண்ட நாட்களாக தொடருகின்ற அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த ஒரு திட்டத்தை பிரதமர் அபிசிட் நிராகரித்துள்ளார்.
பிரதமர் அபிசிட் நாடாளுமன்றத்தை முப்பது நாட்களுக்குள் கலைத்தால் தாம் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று தலைநகர் பாங்கொக்கின் ஒரு பகுதியை பல வாரங்களாக ஆக்கிரமித்திருக்கும் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள்.
ஆனால், வன்செயலையும் மிரட்டலையும் கைக்கொள்ளும் ஒரு குழுவின் நிபந்தனைகளை தன்னால் ஏற்க முடியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.
தாங்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குள் பாதுகாப்புப் படையினர் நுழைந்துவிடுவார்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தாய்லாந்து நெருக்கடியை அமைதிவழியில் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள் காலாவதியாவதாக பாங்கொக்கில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
அரசாங்கம் உடனடியாக பதவி விலகி புதிய தேர்தல்களை நடத்த வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னர் கோரினர்.
‘’30 நாள் காலக்கெடு ஒரு பிரச்சனையல்ல, நாடாளுமன்றத்தை கலைப்பது முழுநாட்டுக்கும் நன்மை தரவேண்டும், செஞ்சட்டைக்காரர்களுக்காக அதனைச் செய்யமுடியாது’’ என்றார் தாய்லாந்து பிரதமர்.
2010 ஆம் ஆண்டின் இறுதிக்குள், உரிய காலத்துக்கு ஒருவருடத்துக்கு முன்னமே தேர்தலை நடத்த இணங்குவதாக பிரதமர் முன்னர் கூறியிருந்தார்.
செஞ்சட்டை எதிர்ப்பாளர்களில் 2006ம் ஆண்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் ஆதாரவாளர்களே பெருமளவில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக