வெள்ளி, 23 ஏப்ரல், 2010

அரசின் நடவடிக்கை அநாகரிகமானது; அரசியல் சாணக்கியமற்றது - விமல் வீரவன்ச

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் இட ஒதுக்கீடு தொடர்பில் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ள பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, அரசாங்கத்தின் நடவடிக்கை அநாகரிகமானதும் அரசியல் சாணக்கியமற்றதுமான செயற்பாடு என்று சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மட்டுமே பொதுச் செயலாளரே தவிர எமது முன்னணியின் பொதுச் செயலாளர் அல்லர் என்பதை நினைவுபடுத்துகின்ற அதேவேளை, மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் அளவில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் அமைய வேண்டும் என்பதையும் இங்கு கூறி வைக்க விரும்புகிறோம் என்றும் முன்னணி குறிப்பிட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளியாகவே தேசிய சுதந்திர முன்னணி பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இதன்போது எமது தரப்பிலிருந்து முன்னாள் எம்.பியான மொஹம்மட் முசம்மில் தனது பெயரைக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஆளும் தரப்புக்கு 127 ஆசனங்கள் கிடைத்து அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில், கிடைக்கப் பெற்ற 17 தேசியப் பட்டியல் ஆசனங்களில் இருந்து எமக்கு ஓர் ஆசனம் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது. எமக்கு தேசியப் பட்டியலினூடாக இரண்டு ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே எமது இணக்கப்பாடாகும். இந்த இணக்கப்பாடு தற்போது உடைத்தெறியப்பட்டுள்ளது. மேலும் ஆளும் கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆசனங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே அதிகமான ஆசனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் பங்காளிக் கட்சிகளையும் கவனத்திற் கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது வாதமாகும். நாம் எம்மை மட்டும் குறிப்பிடவில்லை. ஆளும் கட்சியில் ஜாதிக ஹெல உறுமயவும் இருக்கின்றது. இன்னும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இதனை உணர்ந்து செயற்பட்டிருக்க வேண்டும். அதனை விடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தான்தோன்றித்தனமாக செயற்பட்டு, எமது முன்னணிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்திற்கு வேட்டு வைத்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த ரஜீவ விஜேசிங்கவுக்கு இடமளித்திருக்கின்ற பொதுச் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த, எமது தரப்பின் மொஹம்மட் முசம்மிலை நிராகரித்துள்ளார். அவ்வாறு செய்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. தேசியப் பட்டியல் இடஒதுக்கீடு தொடர்பில் 20 ஆம் திகதி இரவிலேயே எமக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது எமது தரப்பிலிருந்து ஒருவருக்கு மட்டுமே இடமளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளியிட்ட நாம் மறுநாள் 21 ஆம் திகதி காலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விளக்கமளித்தோம். இருந்தும் 21 ஆம் திகதி காலை 9.00 - 10.00 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை சுசில் பிரேம் ஜயந்த தேர்தல்கள் செயலகத்தில் சமர்ப்பித்து விட்டார். இதனை ஒரு மோசமான நடவடிக்கையாகவே கருதுகிறோம். சகோதர கட்சிகளை பகைத்துக் கொண்டும் முரண்பட்டுக் கொண்டும் அரசியல் நடத்த முடியாது. அதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை. இதனை அரசாங்கம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இவ்வாறு நாம் செய்தியாளர் மாநாட்டை நடத்தி எமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை வெளிப்படுத்துவதானது எமக்கு கிடைக்காது போன தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்வதற்காக அல்ல.மாறாக அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அதேபோன்று மக்களும் இதனை அறிந்திருக்க வேண்டியதாகும். எமது தேசிய சுதந்திர முன்னணி சரியான முறையில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றது. இன்று நாம் ஆளும் கட்சியுடன் இருந்தாலும் சரி நாளைய தினமே அரசாங்கத்தை விட்டு விலகி செயற்பட்டாலும் சரி எமது நேர்மையான அரசியலில் மாற்றம் இருக்கப் போவதில்லை. எனவேதான் நாம் சார்ந்துள்ள ஆளும் கட்சியும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோம். தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது அரசியல் சாணக்கியமற்றது. அத்துடன் அவருக்குப் பொருத்தமான காரியத்தையும் அவர் செய்திருக்கவில்லை. ஐக்கிய தேசிய முன்னணியைப் போல் தேசியப் பட்டியலில் 9 ஆசனங்கள் கிடைத்திருந்தால் எமக்கான ஆசனம் தட்டிக் கழிக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கும். அவ்வாறில்லாது ஆளும் கட்சிக்கு 17 ஆசனங்கள் கிடைத்தும் அது முறையாக நேர்மையாக பங்கிடப்படவில்லை என்பதுதான் கவலைக்குரியது. இவ்வாறான தான்தோன்றித்தனம் மீண்டும் இடம்பெற்று விடாதவாறு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக