சனி, 3 ஏப்ரல், 2010

ஈ.பி.டி.பி வடக்கில் ஆயுத வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக ஆனந்சங்கரியின் குற்றச்சாட்டுக்களுக்கு ஈ.பி.டி.பி கடும் அதிருப்தி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அண்மையில் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் ஈ.பி.டி.பி. கட்சி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈ.பி.டி.பி கட்சி வடக்கில் ஆயுத வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், ஈ.பி.டி.பி கட்சியிடம் எவ்வித ஆயுதங்களும் கிடையாது எனவும், அண்மையில் சாவகச்சேரியில் பாடசாலை மாணவர் ஓருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகவும், இதனால் பல்வேறு சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கும் ஊடகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமை அதிருப்தி ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அவசியமென்றால் அரசாங்கப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், அரசியல் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக சுதந்திரமாக எவரும் சாட்சியமளிக்க முன்வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், அரசாங்கத்தைத் தவிர வேறு எந்தக் குழுவும் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், தமிழர் விடுதலைக் கூட்டணி யாரைச் சுட்டுகின்றதென்பது புரியவில்லை எனவும் ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இவ்வாறு ஈ.பி.டி.பி கட்சிக்கு சேறு பூசப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக