செவ்வாய், 15 டிசம்பர், 2009

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் -அமைச்சர் டிலான் பெரேரா !

யுத்தத்துக்கு பின்னரான நிலைமையில் உள்ள எமது நாட்டை 40வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே கட்டியெழுப்ப முடியும். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எதிரணி கூட்டணி தொடர்ந்து முரண்பாடான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றது. தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்வதாக எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கூறுகின்றார். அப்படியாயின் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன? பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் என்ன வேலைத்திட்டம் உள்ளது? என்று தெரியவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று எதிரணிக்கூட்டணி கூறுகின்றது. ஆனால் தான் வெற்றிபெற்றால் ஒருசில அதிகாரங்களுடன் ஜனாதிபதியாக இருப்பேன் என்கிறார் எதிரணி வேட்பாளர். இவ்வாறு பல வழிகளிலும் எதிரணி கூட்டணி குழப்பங்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் மிகவும் சிறந்த தீர்மானத்தை எடுக்கவேண்டும். அதாவது அரசாங்கத்துக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். காரணம் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள யுத்தத்துக்கு பின்னரான நாட்டை சிறப்பாக கட்டியெழுப்பு 40வருட அரசியல் அனுபவம்கொண்ட ஜனாதிபதியினால் மட்டுமே முடியும். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற விவகாரத்தை பாருங்கள். அரசாங்கம் அந்த மக்களை மிகவும் விரைவாக மீள்குடியேற்றி வருகின்றது. நலன்புரி முகாம்களை பார்வையிட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. க்கள் சிலர் செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தியாவிலிருந்து வருகைதந்த தமிழக எம்.பி. க்களும் நலன்புரி நிலையங்களில் செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் திருப்தி வெளியிட்டனர். அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இந்த வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக