திங்கள், 7 டிசம்பர், 2009

முகாம் மக்களை நிரந்தரமாக விடுவிக்குமாறு றொபேர்ட் ஒபிளெக் கோர வேண்டும் -சர்வதேச மன்னிப்புச் சபை !

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து, ஆறு மாதங்களான பின்னரும் முகாம்களில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிரந்தரமாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் ஒ பிளேக் கோரவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது. நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரொபேர்ட் ஒ பிளேக்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்கக் கிளையின் நிர்வாக இயக்குநர் ரலி கொக்ஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12ஆயிரம் பேர் குறித்தும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் இவ்வாறு தொடர்பின்றித் தடுத்து வைக்கப்படுவதினால் ஏற்படக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டியுள்ள ரலி கொக்ஸ் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொதுமக்கள் விடுவிக்கப்படுவது சமீபகாலங்களில் அதிகரித்துள்ள போதிலும் இதுதொடர்பான பல கரிசனைகள் இன்னமும் தொடர்ந்து காணப்படுகின்றன. வவுனியாவில் முகாம்களில் உள்ள மக்களுக்கு அந்த முகாம்களில் இருப்பதற்கு அல்லது வேறு தங்குமிடங்களைத் தேடுவதற்கு அல்லது வீடு திரும்புவதற்கு உரிய அனுமதியை தான் வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும், முகாம்களிலிருந்து வெளியேற விரும்பும் குடும்பங்கள்மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த மக்கள் 15நாட்களில் மீண்டும் முகாமிற்கு வரவேண்டும் எனக் கேட்கப்பட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. முகாம்களிலிருந்து மக்களை நிரந்தரமாக விடுவிப்பதற்கு அப்பால் புதிய இடங்களில் அவர்கள் கைதுசெய்யப்படமாட்டார்கள், விசாரணைக்குட்படுத்தப்படமாட்டார்கள் என்ற உறுதிமொழி அவசியம். இடம்பெயர்ந்த மக்கள் எங்கு சென்றாலும் அவர்களைப் பராமரிப்பது என்ற தனது கடப்பாட்டை அரசு நிறைவேற்றுவது அவசியம். ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவி வழங்கப்படாதமையும் கரிசனைக்குரிய இன்னுமொரு விடயமாகும். இந்த மக்கள் இடைநடுவில் கைவிடப்பட்ட சம்பவங்களை பல கிறிஸ்தவ அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முரணான தகவல்களை அரசு வெளியிடுகின்றது. தற்போது வழங்கப்பட்டுள்ள நடமாட்ட சுதந்திரம் நாட்டின் அனைத்து முகாம்களுக்கும் பொருந்துமா என்பது தெரியாத விடயமாகவுள்ளது. மக்கள் விடுவிக்கப்படுவதும், மீள்குடியேற்றப்படுவதும் துரிதப்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் அந்த மக்கள் தங்களது மீள்குடியேற்றம் தொடர்பான முடிவைத் தாங்களே எடுப்பதற்கு அரசஅதிகாரிகள் அனுமதிக்கவேண்டும். அந்த மக்களின் வாழ்விடங்களின் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகள் அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக