திங்கள், 7 டிசம்பர், 2009
பொதுவேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் நான் வேட்பாளர் பட்டியலில் இருந்து வாபஸ் பெறவும் தயார் -டொக்டர் ஐ.எம்.இல்லியாஸ்!
இன்று யுத்தம் முடிவுற்று குருதி உறையும் முன்னரே ஒரு ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கின்றோம் என யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போது ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளவருமான டொக்டர் ஐ.எம்.இல்லியாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 06வருடத்துக்கு முன்னர் முதிர்ச்சிபெறாத இத்தேர்தல் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எவரும் முறையான தீர்வு எதனையும் வைக்காதநிலையில் நாம் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். சிறுபான்மை மக்களின் வாக்கு சக்திமிக்கதாக பேரம் பேசக்கூடியதாக இருக்க வேண்டுமானால் நாம் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும். முதல்வாக்கை நாம் அவருக்கு அளிக்கும் பட்சத்தில் எவரும் 50 வீத வாக்குகளைப் பெறாமல் இரண்டாம் சுற்றுக்கு தள்ளப்படுவார்கள். யார் சிறுபான்மை மக்களுக்கு அதிகபட்ச உரிமைகளை வழங்குகிறார்களோ அவர்களுக்கு எமது இரண்டாவது வாக்கை கடைசி நேரத்தில் அளிக்கமுடியும். ஏனைய நாடுகளில் சிறுபான்மை மக்கள் இந்த முறையைப் பின்பற்றியே ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து வருகிறார்கள். இதனடிப்படையிலேயே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளேன். எனவே, தமிழ் முஸ்லிம் மக்கள் சிந்தித்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் நான் வேட்பாளர் பட்டியலில் இருந்து வாபஸ்பெறவும் தயாராக இருக்கிறேன். எனவே, தமிழ் முஸ்லிம் தலைவர்களும் மக்களும் இவ்விடயத்தில் சிந்தித்துச் செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக