வியாழன், 3 செப்டம்பர், 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்!


ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகொப்டர் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா ரோலபெண்டா இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரின் உடல்களும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.ஏற்கனவே அவர் பயணித்த ஹெலிகொப்டர் காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த நால்வரின் உடல்களும் கருகிப் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் உடல்கள் மலைப் பகுதியிலிருந்து மீட்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராஜசேகர ரெட்டியின் மரணச் செய்தியை ஆந்திர அரசு அறிவித்தவுடன், பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் உடல்கள் இருந்த இடத்தையும், முதல்வர் பயணித்த ஹெலிகொப்டரையும் கண்டுபிடித்தது. காலை 8.35 மணிக்கு ஹெலிகொப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
கர்னூலிலிருந்து 48 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள மலைக் குன்றில் ஹெலிகொப்டர் விழுந்திருந்தது. இதையடுத்து மேலும் பல ஹெலிகொப்டர்கள் அங்கு சென்றன. பாரா கமாண்டோக்கள் கயிற்றின் மூலம் கீழே இறங்கி ஹெலிகொப்டரை நெருங்கினர்.
உடல் பாகங்களைச் சேகரித்து கர்னூல் கொண்டு செல்லும் முயற்சியில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளன. பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உடல்கள் ஹைதராபாத் கொண்டு செல்லப்படும். இந்தப் பணி எப்போது முடிவடையும் என்பதைச் சொல்ல முடியாது.
இன்று மாலை 3.00 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கூடுகிறது. அப்போது ராஜசேகர ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். மிகச் சிறந்த முதல்வர், மிகப் பெரிய தலைவர். ராஜசேகர ரெட்டியின் மறைவால் அனைவரும் அதிர்ந்தும்இ உறைந்தும் போயுள்ளோம்” என்றார் ப.சிதம்பரம்.
இன்று மாலை ஹைதராபாத்துக்கு ராஜசேகர ரெட்டியின் உடல் கொண்டு வரப்படும். பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுஇ நாளை அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக