செவ்வாய், 11 நவம்பர், 2014

மூன்றாவது தடவையாக போட்டியிட முடியுமா உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைப்பு..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, உச்ச நீதிமன்றினால் அளிக்கப்பட்ட சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? பதவிப் பிரமாணம் செய்து நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு சட்ட விளக்கம் அளிக்கமாறு ஜனாதிபதி உச்ச நீதிமன்றிடம் கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்றம் நேற்று இந்த சட்ட விளக்க அறிக்கையை அலரி மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த சட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பொருத்தமான இடத்தில் வைத்து வெளியிடப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சில வேளையில் அந்த இடம் நாடாளுமன்றமாக இருக்கக் கூடுமென குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 5ம் திகதி ஜனாதிபதி உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியிருந்தார்.

எவ்வாறெனினும் விரைவில் இந்த சட்ட விளக்கம் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக சட்ட விளக்க அறிக்கைகள் நாடாளுமன்றிற்கு அனுப்பி வைப்பது வழமையானது என்ற போதிலும், இம்முறை சட்ட விளக்க அறிக்கை அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பகிரங்கமாக வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து தங்களது பக்க நியாயங்களை முன்வைக்க உரிய சந்தர்ப்பத்தையோ கால அவகாசத்தையோ உச்ச நீதிமன்றம் வழங்கவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் எதிர்க்கட்சிகளும் விசனம் வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக