வெள்ளி, 31 அக்டோபர், 2014

வாக்குகளை இலக்கு வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது இரா. சம்பந்தன்..!!

வாக்குகளை இலக்கு வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சில தரப்பினருக்கு நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாது தேர்தலை இலக்கு வைத்து சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் எமக்கு உடன்பாடில்லை.

நல்லாட்சியை இன்று நாட்டில் காண முடியவில்லை.  நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

வெளிநாட்டு உதவியுடன் சில அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், அரசாங்கம் சொந்த நிதியில் வட, கிழக்கு மக்களுக்கு எவ்வித அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

மீன்பிடித்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை தொடர்பிலான நிதி ஒதுக்கீடுகள் குறித்து திருப்தி அடைய முடியாது.


போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப அரசாங்கத்தின் உதவி அவசியமாகின்றது. எனினும், போதியளவு உதவிகள் கிடைக்கப்பெறுவதில்லை.

மீள்குடியேற்றம் என்பது மிகவும் பாரிய செயன்முறையாகும். அதனை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.

அரசாங்கம் குறுகிய அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றது.

எமது மக்கள் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள் அல்ல.

எங்களுக்கு போர் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

தேசிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டிருந்தால் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய போர் இடம்பெற்றிருக்காது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அரசாங்கம் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நோக்குகின்றது. இது வேதனைக்குரியது.

ஐக்கிய பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வேண்டும் என்பதே எமது நோக்கமாக அமைந்துள்ளது. தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும்.

எமது நாட்டுப் பிரச்சினைக்கு நாமாகவே தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக