வியாழன், 19 ஜூன், 2014

சமூக வேலைத்திட்டங்களில் முன்னாள் போரளிகள் ஈடுபாடு; வடக்கு விவசாய அமைச்சர் புகழாரம்!!

சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத்திட்டங்களில் முன்னாள் போராளிகளேஅதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். அத்துடன் தாம் செய்யும் வேலைகளைச் செம்மையாகவும் வினைத்திறனுடனும் செய்கின்றனர் என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பாதீனியம் ஒழிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ பாதீனியத்துக்கு 10 ரூபா என்று பணம் கொடுத்துக் கொள்வனவு
செய்யும் திட்டமொன்றை வடமாகாண விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையில் பங்கேற்றவர்களுக்குப் பணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தமை வருமாறு, பாதீனியம் விவசாயத்துக்கும் மனித உடல்நலத்துக்கும் மாத்திரம் அல்லாமல் உள்ளூர் தாவர இனங்களின் உயிர்ப்பல்வகைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள ஓர் அந்நிய ஊடுருவல் களை. இதை ஒழிப்பதில் விவசாய அமைச்சு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல் எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறாது. அதனால் வேலைக்கு உணவு, பணம் கொடுத்துக் கொள்வனவு என்று பொதுமக்களையும் பாதீனியம் ஒழிப்பில் இணைத்துக்கொள்ளும் விதத்திலான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

ஆனால், பொதுமக்களின் பங்கேற்பு எதிர்பார்த்ததைவிடவும் குறைவாகவே உள்ளது. போருக்குப் பின்னர், அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகையோடு எல்லாவற்றுக்கும் அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் சமூகமாக எமது சமூகம் மாறிவிட்டது. வீட்டு வாசலில் நிற்கும் பாதீனியத்தைக்கூட இன்னொருவர் வந்து பிடுங்கவேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் விதிவிலக்காக, பாதீனியம் ஒழிப்பில் முன்னாள் போராளிகள் பலர் விருப்பத்தோடு எங்களுடன் கைகோர்த்திருக்கிறார்கள்.

அர்ப்பணிப்பு உணர்வும் செயலூக்கமும் மிக்க ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளையும் உள்வாங்கக்கூடிய வேலைத்திட்டங்களை அடையாளங்கண்டு முன்னெடுப்பது நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமாகும் - என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு. எல். எம் ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் கி. சிறீபாலசுந்தரம், அ. சகீலாபானு, மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ. சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந. சுதாகரன் மற்றும் விவசாயப் போதனாசிரியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். 500 கிலோவுக்கும் அதிகமான பாதீனியத்தை வழங்கியவர்களுக்குப் பணத்தோடு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக