புதன், 25 ஜூன், 2014

கச்சதீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்து விடலாம் சிவாஜிலிங்கம்..!!!

கச்சதீவை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும்,, டெலோ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிவாஜிலிங்கம் பேசுகையில்,

இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால், இலங்கைக்கு கடந்த 1974ம் ஆண்டு கச்சதீவு வழங்கப்பட்டது. இதனை இந்தியாவுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை நீண்ட நாள்களாக நான் ஆதரித்து வருகிறேன்.

இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதி பெறாமல், இலங்கைக்கு கச்சதீவு வழங்கப்பட்டதை எதிர்த்து இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயன்றேன். ஆனால் நான் இந்திய பிரஜை கிடையாது என்பதால், என்னால் வழக்குத் தொடர முடியவில்லை.


கச்சதீவை இந்தியாவுக்கு திருப்பி கொடுப்பதன் மூலம், தமிழகம் மற்றும் வடக்கு இலங்கையைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தீர்வு காண முடியும்' என்று தெரிவித்தார்.

சிவாஜிலிங்கத்தின் கருத்து குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன், செய்தியாளரிடம் பேசுகையில்,

கச்சதீவு விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடன் சிவாஜிலிங்கம் கலந்து பேசவில்லை. எந்தச் சூழ்நிலையிலும், இந்த விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசிக்கவுமில்லை; முடிவெடுக்கவுமில்லை.

ஒருவேளை இந்த விவகாரம் பெரிதானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது குறித்து மிகக் கவனத்துடன் பரிசீலிக்கும். எனினும் சிவாஜிலிங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக