வெள்ளி, 20 ஜூன், 2014

வன்முறையைத் தூண்டி மதகுரு உரை; அதன் பின்னரே முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்! சபையில் அம்பலப்படுத்தினார் சம்பந்தர்!!

இந்த நாட்டின் பொலிஸ் படையும், ஆயுதப் படைகளும் சிங்களமே என்று சூளுரைத்துப் பேசினார் வணக்கத்துக்குரிய ஒரு மதகுரு. கடும் சொற்பிரயோகங்களுடன், வன்முறையைத் தூண்டும் விதத்தில் அமைந்த அந்த மிக மோசமான பேச்சுக்கு, அங்கு திரட்டப்பட்டிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்புக் கொடுத்தனர். அதன் பின்னர் இடம்பெற்ற ஊர்வலத்தின் போதே முஸ்லிம்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டனர். சட்டத்தை நிலைநிறுத்தும்
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வாளாயிருந்தனர்.

இப்படி நாடாளுமன்றத்தில் விடயத்தைப் போட்டுடைத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். பேருவளை, அளுத்கம நிலைமை குறித்து கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் நீண்ட உரை ஒன்றை இரா.சம்பந்தன் எம்.பி. ஆற்றினார் என்பது தெரிந்ததே. அதன் முடிவிலேயே அவர் விடயத்தை நேரடியாகப் போட்டுடைத்தார். அந்த உரையின் இறுதிப் பகுதியின் முழு விவரம் வருமாறு:-

என்னுடைய உரையை முடிப்பதற்கு முன்னர் மனித உரிமைகள் விவகாரத்தோடு சம்பந்தப்படுகின்ற - அளுத்கம, பேருவளை, தர்க்காநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சில விடயங்களைக் குறிப்பிட அனுமதிக்கும்படி வேண்டுகிறேன். சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்தோடு விடயம் முடிந்துவிட்டது. வணக்கத்துக்குரிய மதகுரு ஒருவரின் பேச்சின் வீடியோப் பதிவை நான் பார்த்தேன். கடும் சொற்பிரயோகங்கள் கொண்ட பேச்சு அது; வன்முறையைத் தூண்டும் மிக மோசமான பேச்சு; வன்முறையை நாடும் படி மக்களைத் தூண்டும் பேச்சு. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்திய அந்தப் பேச்சில் இந்த நாட்டின் பொலிஸ் படையும் ஆயுதப் படையும் சிங்களப் படைகள் என்று கூறப்பட்டது.

அதிகளவில் மக்கள் அதிகளவில் மக்கள் கூட்டப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் இந்தப் பேச்சைத் தொடர்ந்து பலத்த கைதட்டலுடன் அதற்கு வரவேற்பளிக்கப்பட்டது; தொடர்ந்து ஊர்வலம் ஒன்று நடந்தது. அந்த ஊர்வலம் நடக்கையில் கடைகள் தாக்கப்பட்டன; வீடுகள் தாக்கப்பட்டன; பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன; மக்கள் தாக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தனர். இருவர் உயிரிழந்தனர். முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது, சட்டத்தை நிலைநிறுத்தும் அதிகாரிகள் ஏன் வாளாவிருந்தனர்? அவர்கள் ஏன் செயலிழந்து நின்றனர்? அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தொழிற் சங்க உரிமைகளையோ, சம்பவத்தையோ வேதனத்தையோ கோரி தொழிலாளர் ஊர்வலம் போவதற்குக் கூட நீங்கள் தடை விதிக்கின்றீர்கள்.

பல்கலைக்கழகத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்புச் செய்து எதிர்ப்புக் காட்டுவதைக் கூட நீங்கள் தடுக்கின்றீர்கள். அப்படியாயின் இந்த ஊர்வலத்தை மட்டும் நீங்கள் ஏன் தடுக்கவில்லை? இந்த ஊர்வலம் தடுக்கப்படக்கூடாது என்பது அரசின் தீர்மானமா? சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் வேண்டுமென்றே தமது கடமையைத் தளர்த்தி நின்றார்களா? தங்களுடைய பொறுப்பை ஆற்றாமல் அந்தக் கூட்டத்தினர் தங்களின் கைவரிசையைக் காட்டுவதற்கு இடமளித்து நின்றார்களா? இந்தக் கேள்விகளுக்கு எங்களுக்குப் பதில் வேண்டும். இந்த விடயத்தை ஒட்டி எதிர்க்கட்சித் தலைவர் ஓர் அறிக்கையை இந்தச் சபையில் முன்வைத்தார்.

அத்துடன் விடயம் முடிந்துவிடக்கூடாது. இந்த நாட்டின் எந்த ஒரு பிரஜைக்கும் - அவர் சிங்களவரோ, முஸ்லிமோ, தமிழரோ, பறங்கியரோ, மலேயரோ எந்த இனத்தைச் சார்ந்தவராயினும் - இப்படி நடக்கக்கூடாது என்பதால்தான் நான் கவலைப்படுகின்றேன். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தைப் பொறுத்தவரையில், இந்த நாட்டின் ஒரு பிரிவு மக்களுக்கு ஒரு மாதிரியும், இன்னொரு பிரிவு மக்களுக்கு வேறு மாதிரியும் அது இருக்க முடியாது.

 ஒரு பகுதியினர் தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள், சட்டத்துக்குக் கட்டுப்படவேண்டியவர்கள் அல்லர், தண்டனை விலக்களிப்பு மூலம் தங்களை அரசு பாதுகாக்கும் என்பதால் சட்டத்தை அவமதிக்கலாம் என்று செயற்படமுடியாது. தாங்கள் எடுக்கும் உரிய சட்ட நடவடிக்கைக்கு இந்த அரசு ஆதரவு தரும் என்ற நம்பிக்கை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு இருந்திருந்தால் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுத்திருப்பர் என்பதுதான் எனது நிலைப்பாடு.

இந்த விடயத்தில் சட்டத்தின் கீழ் தமக்கு இடப்பட்டுள்ள கடப்பாட்டை சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய அதிகாரிகள் எடுக்கவில்லை எனின், அத்தகைய நடவடிக்கை எதையும் எடுத்தால் அது அரசினால் தங்கள் மீதான குற்றமாகப் பார்க்கப்படும் என்ற அவர்களின் அச்சம்தான் காரணம் என நான் நினைக்கிறேன். ஆகவே, சட்டத்தை நிலைநிறுத்தும் அம்சத்தில் இந்த நாடு எங்கே போகின்றது என்ற விடயத்தில் - இந்த நாட்டின் ஒரு பிரஜை, அவன் என்ன இனத்தைச் சேர்ந்தவன் என்ற வேறுபாடில்லாமல் அவனுக்கான பாதுகாப்பை அளிப்பதற்கு சட்டத்தின் பாதுகாப்பு எதுவரை வழங்கப்படும் என்பதில் - அரசின் திட்டவட்டமான, தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நாம் அறிய விரும்புகிறோம். - என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக