அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயங்கும் பெர்க்லே சட்ட கல்லூரி உலகிலேயே மிக சிறந்த கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தான் அமெரிக்காவில் இயற்றப்படும் பல்வேறு அரசியலமைப்பு சட்டங்கள் ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த பெர்க்லே சட்ட கல்லூரி டீனாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 44 வயதான சுஜித் சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஜூலை 1ம் தேதி டீனாக பொறுப்பேற்பார் என்றும் தொடர்ந்து ஐந்து
ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என்றும் கல்லூரி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுஜித் சவுத்ரியின் நியமனம் குறித்து கலிபோர்னியா பல்கலை துணை வேந்தர் கிளாடி ஸ்டீல் கூறுகையில் “சமூக மாற்றம், பன்முகத் தன்மை மற்றும் கல்வியில் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் சுஜித் சவுத்ரி செயல்பட்டு வருகிறார். அவர் மிகச் சிறந்த அறிஞர், பேராசிரியர் மற்றும் அறிவுரையாளர். அவரது பதவி காலத்தில், சட்ட பணிகளை ஊக்குவிக்கும் விதமாக மாற்றத்தை கொண்டு வரும் விதமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். இந்த பதவி குறித்து சுஜித் சவுத்ரி கூறுகையில் “பெர்க்லே சட்ட கல்லூரி டீனாக பொறுப்பேற்பது எனது வாழ்நாள் லட்சியமாக இருந்தது என்றார்.
சுஜித் சவுத்ரி சட்டம் மற்றும் அரசியலமைப்பு குறித்து இதுவரை 70 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக