ஞாயிறு, 4 மே, 2014

தாய்லாந்து பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி !!!!

தாய்லாந்தின் நீதித்துறை மற்றும் ராணுவப்பிரிவுகளின் ஆதரவு கொண்ட முடியரசு அமைப்பிற்கும், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மக்களின் பாரம்பரியமான ஆதரவுடன் ஆட்சி நடத்தும் கோடீஸ்வர ஷினவத்ரா குடும்பத்தினருக்கும் இடையில் நடந்துவரும் எட்டு வருடப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை.
கடந்த 2006-ம் ஆண்டில் பிரதமர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட தக்ஷின் ஷினவத்ராவை தற்போது பதவியில் உள்ள அவரது சகோதரி இங்க்லக் பின்பற்றுவதாகக் குறைகூறும் எதிர்க்கட்சித் தரப்பு அவர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டத்தை கடந்த ஆண்டு
இறுதியில் ஆரம்பித்தது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களில் 25 பேருக்குமேல் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து நடந்த போராட்டங்களையும் மீறி கடந்த பிப்ரவரியில் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனால் அந்தத் தேர்தலை செல்லாததாக அறிவித்த அரசியலமைப்பு நீதிமன்றம் வரும் ஜூலை மாதம் மறு தேர்தலுக்கு நாள் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அபிசித் வெஜ்ஜஜிவா புதிய தேர்தல் அறிவிப்பு குறித்த தங்களது ஒத்துழைப்பினை வெளியிடவில்லை. மாறாக காபந்து பிரதமராக உள்ள இங்க்லக் பதவி விலகுவதை வலியுறுத்தியுள்ளார்.
இங்க்லக் பதவி விலகியபின் அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கம் அங்கு நடைபெற வேண்டிய அரசியல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டு வாக்கெடுப்பின் மூலம் நிலைமை சீரமைக்கப்பட வேண்டும். அதன்பின்னரே ஆறு மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்க்லக் இந்தத் தியாகத்தை செய்ய வேண்டும். எந்தக் கட்சியும் இந்தத் திட்டத்தில் நூறு சதவிகித வெற்றியைப் பெறமுடியாது. இருப்பினும் அனைவரும் தங்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்த முடியும் என்று அபிசித் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக