ஞாயிறு, 4 மே, 2014

கோபி என்ற கஜீபனின் மனைவி விடுதலை...

இலங்கையில் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் வெள்ளியன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த நால்வரில் இருவர் பெண்கள். இருவர் ஆண்கள்.
 
நெடுங்கேணி காட்டுப்பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பொன்றின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரான கோபி என்று இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த கஜீபன் என்பவரின் மனைவி சர்மிளா, கஜீபனின் தாயாருக்கு உதவியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படும் புவனேஸ்வரி ஆகிய இரண்டு பெண்களுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் விடுதலைப் புலிகளை மீளிணையச் செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள் என்றே கோபி என்ற கஜீபன் உள்ளிட்ட மூவரின் மீதும் அரசு குற்றம் சாட்டியிருந்தது.
 
இவர்களுடன் பேக்கரி உரிமையாளர் எனக் கூறப்படும் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பேக்கரியில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொருவர் விடுதலையாகியுள்ளார்.
 
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கும், விடுதலைப்புலிகளை மீளிணையச் செய்வதற்கும் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் உதவியோடு இலங்கையில் சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக இராணுவம் குற்றம் சுமத்தியிருந்தது.
 
இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும், அவர்களுக்கு உதவினார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
 
அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பூஸா முகாம் உட்பட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
 
வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டிருப்பவர்கள் உட்பட கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை காவல்துறை பேச்சாளரிடம் உடனடியாகப் பெறமுடியவில்லை.
 
BBC

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக