வெள்ளி, 23 மே, 2014

நினைவு தினங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை அழித்துவிட முடியாது பொ.ஐங்கரநேசன்.....!!!!!

நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் ஒன்பதாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (22.05.2014) நடைபெற்றபோது
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே  பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில்,
மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நாள். இந்த நாள் என்பது ஈழத்தமிழ்மக்களோ, உலகத் தமிழர்களோ மாத்திரம் அல்லாமல் பூமிப்பந்தெங்கும் பரந்து வாழுகின்ற மனித நேயமுள்ள அனைவரும் நினைவில் வைத்திருக்கும் நாள். ஆனால், கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவுகூரும் இந்தத் தினத்தைக் கடைப்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது.

மே 18 விடுதலைப்புலிகளின் தினம் அல்ல. மரணித்த விடுதலைப்புலிகளைப் பிரத்தியேகமாக நினைவுகூருகின்ற நாள் மாவீரர் தினம் எனப்படும் நொவம்பர் 27ஆம் திகதிதான். மே 18, இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்குமான பொது நினைவு நாள். நினைவு நாட்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடாத்துவதும், பிதுர்க்கடன்களை நிறைவேற்றுவதும் எமது பண்பாட்டின் கூறுகளில் ஒன்று. இவற்றுக்குத் தடைவிதிப்பதன் மூலம் அரசு எமது பண்பாட்டு உரிமைகளையும்; பறிக்க ஆரம்பித்திருக்கிறது.


விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடமிருந்து நிலங்களை மீட்டெடுத்தபோது, அங்கு காணப்பட்ட இராணுவத்தினரின் நினைவுக்கற்களை அழிக்கக்கூடாது என்று தலைவர் உத்தரவிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்த நினைவு நடுகற்களையெல்லாம் இராணுவம் இடித்து அழித்தது. அகிம்சை ரீதியாகப் போராடிய திலீபனின் நினைவுத் தூபியைக்கூட விட்டுவைக்கவில்லை. இப்போது இறந்த மக்களை நினைவுகூருகின்ற நிகழ்ச்சிகளைக்கூடப் புலிகளின் நினைவு என்று சொல்லித் தடைவிதித்திருக்கிறது. ஆனால், நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன்  மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.


முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று புதைக்கப்பட்டார்கள். அங்கு புதைக்கப்பட்டது வெறும் சடலங்கள்; அல்ல் நம்பிக்கைகளின் விதைகள். எதிர்காலத்தில் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வோம் என்ற அந்த நம்பிக்கை விதைகள் ஒருபோதும் வீண்போகாது. ஆனால், முள்ளிவாய்க்காலில் அரசு விதைத்தது பேரினவாத வினை. அந்த வினைக்கான அறுவடையை அரசு எதிர்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக