திங்கள், 5 மே, 2014

உலக இளைஞர் மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!!!

உலக இளைஞர் மாநாட்டுக்கு 168 நாடுகளின் பிரதிநிதிகள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரு தெரிவித்தார்.
நேற்று ஹம்பாந்தோட்டை மாகம்றுகுணுபுற மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடந்து உரையாற்றுகையில், பிஜி, மியன்மார் ஆகிய நாடுகளில் இருந்து முதலாவது வெளிநாட்டு அமைச்சர் பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதோடு உலக இளைஞர் மாநாட்டு அரம்ப நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை 6ம் திகதி 11.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாகம் றுகுணுபுற சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் மகா சபையின் தலைவர், ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவரின் இளைஞர் பிரதிநிதி, அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மாநாட்டு ஏற்பாட்டு குழு இணைத் தலைவர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.
இலங்கை வாழ் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக உத்வேகத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாடு ஆரம்பித்து முடிவடைந்தாலும் இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ள கொழும்பு பிரகடனத்தின் விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப் படவுள்ளது.
விசேடமாக இலங்கையில் ஒவ்வொரு கிராமங்களிலும் இத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
உலகின் முன்னணி இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதன் ஊடாக இவர்களுடைய லோசகைளும் அரசு மற்றும் தனியார் துறையின் லோசனைகளும் பெறப்பட்டு கொழும்பு பிரகடனம் தயாரிக்கப்பட உள்ளது.
இந்த பிரகடனத்தில் எமது எதிர்கால இளைஞர்களுக்குத் தேவையான யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதல் தடவையாக ஹம்பாந்தோட்டை நகரம் இளைஞர் நகரமாக ஜனாதிபதியினால் பிரகடனப் படுத்தப்பட உள்ளது. இலங்கையின் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட இந்த நகரில் இரண்டாவது சர்வதேச மாநாடு நடைபெறுவதன் ஊடாக இந்த நகருக்கு மேலும் பெருமை சேர்ப்பதாய் இருக்கும்.
இந்த நகரை கட்டியெழுப்புவதில் விசேட கவனம் செலுத்தி வருவதனால் தான் தலைநகரங்களில் மாத்திரம் நடத்தப்பட்ட இவ்வாறான மாநாடுகள் இன்று ஹம்பாந்தோட்டை நகரில் நடத்தப் படுகின்றது.
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. இந்த நகரை இளைஞர் நகராக கட்டியெழுப்புவதற்கு தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகிறார்.
அத்துடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்களும் அதற்கு சிறந்த தலைமைத் துவத்தை வழங்கி வருவதனால் தான் எமது பின்தங்கிய கிராமங்களில் உள்ள இளைஞர் பிரதிநிதிகளுக்கும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு, முயற்சியினால் ஏற்பட்டதென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, மேல்மாகாண சபை உறுப்பினர் சுசார தினால், ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.பீற்றர் சொய்ஸா உட்பட மேலும் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக