சனி, 24 மே, 2014

மஹிந்த நாளை புதுடில்லி பயணம் மோடி பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பு.....!!!!!

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை 25 ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு நாளை மறுதினம் 26 ம் திகதி புதுடில்லியில் நடை பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ளுமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நரேந்திர மோடி விசேட அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை புதுடில்லி
பயணமாகிறார்.

தேர்தலில் அமோக வெற்றியீட்டி புதிய இந்திய பிரதமராகியுள்ள நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து டுவிட்டரில் இதற்குப் பதிலளித்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி தம்முடன் தொலைபேசி மூலம் உரையாடியமை தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் இரு நாடுகளுக்குமான உறவை மேலும் பலப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் புதிய இந்தியப் பிரதமர் உட்பட முக்கியஸ்தர்கள் பலருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எட்டு சார்க் நாடுகளில் ஏழு நாடுகளின் தலைவர்கள் அவரது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சார்க் நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர ஏனைய ஏழு நாடுகளின் தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

அத்துடன், ஏழு நாடுகளினதும் தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்துபசாரம் அளித்து கெளரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக