திங்கள், 26 மே, 2014

கடும் வாதப் பிரதி வாதங்களுடன் நடைபெற்ற மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்!! (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு மாவட்டத்தின் 2014ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணப்புக்குழுக் கூட்டம் கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் பிரதேச கலாசார நிலையத்தில் இன்று காலை கடும் வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சருக்கு இணைத்தலைவர் பதவியில்லை. அவரை எவ்வாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் தமக்கருகில்
அமர வைத்தார் என்ற கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து பெரும் குழப்பம் ஒன்று ஏற்பட்டது. அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் நடத்தாது கொக்கட்டிச்சோலையில் நடத்துவது தொடர்பிலும் ஒழுங்குப்பிரச்சினை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தை மாவட்ட செயலகத்தில்தான் நடத்த வேண்டுமென்பது சட்டமல்ல என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். கூட்ட ஆரம்பத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில்தான் நடத்தப்படல் வேண்டும்.

மாவட்ட செயலகத்திற்கு வெளியே கூட்டத்தை நடத்துவது பிழையான நடவடிக்கையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இதர அமைச்சுக்கள் ஒதுக்கீடு செய்துள்ள நிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு இந்த வருடத்தில் எஞ்சியுள்ள மாதங்களில் செலவு செய்ய வேண்டும் என்பவை தொடர்பாகவும் இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டன.


பொருளாதார அபிவிருத்தி பிரதியசைமச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக