ஞாயிறு, 14 நவம்பர், 2010
மலையகப் பெருந்தோட்டங்களில் இந்தியாவின் உதவியுடன் வீடுகளை நிர்மாணிக்க ஏற்பாடு..!
மலையகப் பெருந்தோட்டங்களில் இந்தியாவின் உதவியுடன் வீடுகளை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்- பொருளாதார பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார். ஐயாயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ள நிலையில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென்று கூறிய பிரதியமைச்சர், கொத்தணி முறையில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. வீடுகளுக்கான பயனாளிகளைத் தெரிவுசெய்து பட்டியல்களும் தயாரிக்கப் பட்டுள்ளன. குறிப்பிட்ட தோட்டங்களின் மேற்பார்வையாளர்கள் ஊடாகப் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர், பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட விபரங்களை காங்கிரஸின் செயலாளர் நாயகம்- அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிப்பாரென குறிப்பிட்டுள்ளார். மலையகப் பெருந்தோட்டத் தொழிலாள சமூகத்தின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்களுக்குத் தனித்தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. முதலில் ஐயாயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க இணக்கமாகியுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக கொத்தணி முறையில் ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மலையத்கதில் லயன் குடியிருப்புகளை இல்லாமற் செய்து தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களை உருவாக்குவதற்கு 3 இலட்சத்து 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இலங்கை இந்திய அரசுகளின் உதவியுடன் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிவிட முடியுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக