திங்கள், 17 மே, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு விஜயம்..!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தெஹ்ரானில் நடைபெற்று வரும் ஜீ15 மாநாட்டின் போது, இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களான எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இடம்பெயர் மக்களது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் குறித்து இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது இந்திய விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இடம்பெயர் மக்கள் கௌரவமான முறையில் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் அவர்களுக்குத் தேவையான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் இந்தியா கோரியுள்ளது. இனங்களுக்கு இடையில் சமத்துவத்தை பேணக்கூடிய வகையிலான அரசியல் தீர்வுத் திட்டத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது சகல தரப்பினரினதும் அபிப்பிராயங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக