வெள்ளி, 25 டிசம்பர், 2009

உதயன் சுடர்ஒளி ஆகிய இரு பத்திரிகைகளும் ஐ.தே.கவின் நிகழ்ச்சிநிரலில் இயங்குகின்றன -லண்டனில் சிவாஜிலிங்கம் எம்.பி !!

உதயன் சுடர்ஒளி ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சிநிரலில் இயங்குகின்றன என்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் எம்.பி லண்டனில் தெரிவித்துள்ளார். இப்பத்திரிகைகளின் ஆசிரியரான வித்தியாதரனின் மைத்துனரும், இப்பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநருமான சரவணபவனுக்குக் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு அமைச்சராகவர ஆசை என்றும், ஆனால் தாம் உயிருடன் இருக்கும்வரை அதற்குத் தாம் இடைஞ்சலாக இருப்பார் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லண்டனில் ஊடகமொன்றின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பங்குபற்றி உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ரி.சோதிலிங்கம் என்பவர் இந்நிகழ்வில் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். நீங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராட்ட காலங்களில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைகளை ஆதரித்து, பல போராட்ட வடிவங்களில் புலிகளின் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டீர்கள். இன்று நீங்கள் தமிழ்த் தேசியத்தின் சமஷ்டிக்கான குரலாக இத்தேர்தலில் நிற்கிறீர்கள். புலிகளின் ஆதரவு அமைப்புகள் இன்று உங்களை ஆதரித்து உங்களுடன் நிற்கின்றனவா? அல்லது ஆதரவு தருவார்களா? அவர்களது நிலைப்பாடு என்ன?, புலிகளின் ஆதரவாளர்களும், புலிகளின் முன்னாள் தலைவர்களும் இங்கே இருந்துகொண்டு மேற்குலகின் ஆதரவுடன் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்கிறார்கள், மஹிந்தவை வீழ்த்தலாம் எனச் செயற்படுகின்றார்கள் என்றெல்லாம் கருத்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் உதயன், கொழும்பில் சுடர் ஒளி ஆகியன ஐ.தே.கட்சியை ஆதரிக்கின்றன என்று கூறப்படுகின்றதே. இவை பற்றியும் உங்கள் கருத்து என்ன? என்றே அந்தக் கேள்வியமைந்தது. அக்கேள்விக்குப் பதிலளிக்கையில் சிவாஜிலிங்கம் கூறியதாவது, புலிகளின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் அவர்களிடம் நான் ஆதரவு கேட்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் இந்நாட்டில் யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதும் பின்பு உலகுக்குத் தெரியவரும். உதயன் சுடர்ஒளி பத்திரிகைகள் கட்சிப் பத்திரிகைகளை மீறியஅளவில் கடுமையாக விமர்சனங்களையும் வார்த்தைப் பிரயோகங்களையும் செய்கின்றன. அவர்கள் ஐ.தே.கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இருப்பவர்கள் என்று உங்களுக்கே தெரியும். வித்தியாதரனின் மைத்துனர் சரவணபவன் அடுத்தமுறை கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவருக்கு அமைச்சராக வர ஆசை. அதில் தவறு இல்லை. ஆனால் நாம் உயிருடன் இருக்கும்வரை அவர்களுக்கு இடைஞ்சலாக இருப்போம் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக