இடம் பெயர்ந்த மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் இதுவரை சுமார் பத்தாயிரத்துக்கும் உட்பட்டவர்களே விண்ணப்பித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்களும் அறிவுரைகளும் இந்த மக்களைச் சரியான முறையில் சென்றடையாமையே இதற்குக் காரணமென அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இலட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் அந்த மாவட்டங்களுக்கு வெளியே இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவார்களானால் அவர்கள் வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு விண்ணப்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சுமார் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்வதாகவும் இவர்கள் இது வரையும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கபே' அறிக்கை இதேவேளை, வடக்கில் உள்ள முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களில் மிகப் பெரும்பான்மையோரின் வாக்களிக்கும் உரிமை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பறிக்கப்படலாம் என சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான அமைப்பு "கபே' அச்சம் தெரிவித்துள்ளது.
"கபே'யின் ஊடகப் பேச்சாளரான கீர்த்தி தென்னக்கூன் கூறுகையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள், வாக்களிப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளரால் அனுமதிக்கப்பட்ட காலவரை டிசம்பர் 23 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதன்படி அந்தக்கால கட்டத்துக்குள் தம்மைப் பதிவு செய்து கொள்ளாத இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்து கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 1650 ஆகும். வன்னியில் பதிவு செய்யப்பட்டோர் 5000 பேர். ஆகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகளின் உரிமை மறுக்கப்படலாம் எனவும் தென்னக்கூன் குறிப்பிட்டுள்ளார்.
பூர்வீகமாக வடக்கில் வாழும் மக்கள் தனியானதொரு நிர்வாகம் கோரி 30 வருட காலம் நடந்த போரின் பின்னர், இந்த தேர்தல் மூலம் அரசாங்கத்துடன் ஒன்றிணையக் கிடைத்த சந்தர்ப்பம் இதுவாகும். இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்குவது ஒரு அடிப்படை தேவையாகும். அதுவே இது குறித்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இடம்பெயர்ந்த மக்கள் தம்மைப் பதிவு செய்து கொள்ளாதுபோனமைக்கு முறையான நடைறைகள் மேற்கொள்ளப்படாமையே காரணமாகும். அவர்களுக்கு இது குறித்து அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தென்னக்கூன் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக