ஞாயிறு, 27 டிசம்பர், 2009

மீளக்குடியமர்ந்த நிலையில் இப்பகுதி மக்கள் அடுத்த சுனாமி ஞாபகார்த்த நிகழ்வை அனுஷ்டிப்பார்கள்! - உடுத்துறை நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..!!

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு அதன் ஐந்தாவது வருடப் பூர்த்தியை அனுஷ்டிக்கும் விஷேட வைபவம் இன்றைய தினம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் யாழ் உடுத்துறையில் இடம்பெற்றது. உடுத்துறை பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்நீத்த 946 பேரினது சடலங்கள் அடக்கஞ் செய்யப்பட்டுள்ள மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி அனர்த்த ஞாபகார்த்த தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதன் பின்னர் அங்கு ஈகைச் சுடரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சுனாமி அனர்த்தத்தால் உயிர் நீத்தவர்களது குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 2,000 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன் உடுத்துறையை அண்மித்த கட்டைக்காடு பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர் நீத்தவர்களது சடலங்கள் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் மயானத்திற்கும் அவர்களது உறவினர்களும் நண்பர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்றைய நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த வருடம் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்நீத்தவர்களது கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவர்களது உறவினர்களும் நண்பர்களும் வருகை தந்து உணர்வுப்பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அடுத்த வருடம் இம்மக்கள் இப்பகுதிகளில் மீளக்குடியேறிய நிலையில் சுனாமி காரணமாக உயிர்நீத்த தங்களது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் தெரிவித்தார். மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகள் என்றும் இயற்கையால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகள் என்றும் இருவகை அழிவுகள் எமது மக்களை சொல்லொணா துயரங்களுக்கு ஆளாக்கியிருப்பதை உணர்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தான் தளர்த்தி வரும் நிலையில் வெகுவிரைவில் இப்பகுதி மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்டு அவர்களது வாழ்க்கை நிலைகள் நிரந்தரமாக்கப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக