புதன், 7 அக்டோபர், 2009

அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேறிகளின் மத்தியில் புலிகளும் இருக்கலாம் என இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வல்கம்பாய குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேறிகளின் மத்தியில் புலிகளும் இருக்கலாம் என, அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வல்கம்பாய தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ கோனர் மறுத்துள்ளார். இதன்காரணமாக அவுஸ்ரேலிய சமூகத்திற்குள் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தோன்றியுள்ளதாக வல்கம்பாய குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலத்தில் அவுஸ்ரேலியாவுக்குள் வந்த சட்டவிரோத குடியேறிகளின் மத்தியில் மோதல் சம்பவங்களில் காயங்கள் ஏற்பட்டவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இந்நிலையில் அவர்கள் புலிகளாக இருக்கலாம் என வல்கம்பாய குறிப்பிட்டுள்ளார். இவர்களை நாடுகடத்த வேண்டும் என கேட்டுள்ள அவர், இவர்களால் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை மறுத்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரண்டன் ஒக்கோனர், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகள் உரியமுறையில் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். கடந்த 12 மாதங்களாக மேற்கொண்ட பாதுகாப்பு சோதனைகளின்போது, எவரும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். படகுமூலம் வருபவர்கள் முதலில் சுகாதார பரிசோதனைகளுக்கும் அடையாள பரிசோதனைக்கும், பின்னர் பாதுகாப்பு சோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை தாம் மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்மஸ்தீவில் தாம் சட்டவிரோத குடியேறிகளை உரிய முறையில் பராமரிப்பதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக