வெள்ளி, 9 அக்டோபர், 2009

தேன் இயற்கை அளித்த மாமருந்து

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.
வயிற்றின் நண்பன் தேன்
வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என கூறுகின்றனர். ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.
இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக