வியாழன், 17 செப்டம்பர், 2009

பிரபாவுடன் இணைந்திருந்த தயா, ஜோர்ஜ் மாஸ்டர் மீது குற்றச்சாட்டுகள் இல்லையெனில், புலிகளுடன் தொடர்பில்லாத மக்களை தடுத்து வைப்பது ஏன்? ரணில்



புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்திருந்து அவருக்கு கீழ் செயற்பட்ட தயா, ஜோர்ஜ் மாஸ்டர்கள் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இல்லை எனில், பிரபாகரனையே தெரியாத அவ்வியக்கத்துடன் தொடர்பு பட்டிராத முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மட்டும் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்பு குழுவின் மாநாடு மருதானையிலுள்ள சமூக சமய நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது ; விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர்,மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கின்றார். புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒன்றாக இருந்து அவரின் கீழ் செயல்பட்டவர்களில் இவர்கள் இருவரும் அடங்குகின்றனர். எனினும் பிரபாகரனையே கண்டிராத அவ்வியகத்துடன் தொடர்புகளை வைத்திருக்காதவர்களே இன்று வன்னி அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பிரபாகரனையே தெரியாது.
புலிகளின் தலைமையின் கீழ் இருந்த இருவரும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்து மேற்பட்ட பொதுமக்கள் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். யுத்தம் முடிவடைந்து விட்ட நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்களில் சிலரே இங்கு வருகை தந்துள்ளனர். யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தர்ப்பத்தில் விடுத்த இத்தகைய கோரிக்கைக்கு அமைவாக இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா அன்று விபரங்களை வெளியிட்டார்.
காணாமல் போனவர்கள், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், விடுதலை செய்யப்பட்டோர் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டோர் விபரங்களை வெளியிட்டால் மீதமிருக்கின்ற குறைந்தளவானவர்களுக்கே வழக்கு தாக்கல் செய்யவேண்டிய நிலைமை ஏற்படும். இது தொடர்பில் அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.
வடக்கு கிழக்கை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இவை மட்டுப்படுத்தப்படவில்லை. ஊடகவியாளர்களும் கடத்தப்பட்டுள்ளனர், காணாமல்போயுள்ளனர், கொலையும் செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் தொடர்பிலான விபரங்கள் சர்வதேசத்திற்கு சென்றடைந்துள்ளன, அது தவறானது அல்ல. ஏனென்றால் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் அன்று இதனை பழக்கினார். இவ்வாறானதொரு சம்பிரதாயத்தை உருவாக்கியவரும் அவரேயாவார். மக்களை அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கு சட்டரீதியில் அனுமதியிருக்கின்றதா? மக்களை சிறைப்படுத்தி வைத்திருப்பதற்கு அரசியலமைப்பில் எந்த சட்டமும் இல்லை. மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் அவ்வாறானதொரு ஏற்பாடுகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை . வன்னி முகாம்களிலிருந்து தமிழ்ச்செல்வனின் செயலாளர் உட்பட 10 ஆயிரம் பேர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு தப்பியோடியவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும் எவ்வாறு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக