புதன், 4 மார்ச், 2015

பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு தமிழக இலங்கை மீனவர்கள் 11ம் திகதி பேச்சுவார்த்தை..!!!

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை எதிர்வரும் 11-ந் தேதி நடைபெறுகிறது.
இந்திய-இலங்கை இடையே உள்ள கடல் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக, தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதுடன், மீன்வளத்தை முற்றிலுமாக அழித்து வருவதாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

சிறிசேன ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அந்தவகையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 86 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, 13-ந் தேதி இலங்கைக்கு செல்கிறார். அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவரது பயணத்துக்கு முன்பாக தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதன்படி, இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்கா நேற்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி ஜோசப் மைக்கேல் பெரேராவை சந்தித்தார்.

அப்போது, பிரதமரின் வருகைக்கு முன்பாக, 12-ந் தேதியளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்ட இலங்கை மந்திரி, இதுதொடர்பாக வடக்கு மாகாண முதல்-மந்திரி சி.வி.விக்னேஸ்வரனையும், வடக்கு மாகாண மத தலைவர்களையும் சந்தித்து பேசுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, தமிழக- இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே 11-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக