செவ்வாய், 17 ஜூன், 2014

பொதுபல சேனா பொதுச் செயலாளரின் பேச்சே வன்முறைக்கு காரணம் - அமைச்சர் பௌசி!!


இலங்கையில் இனி மதக் கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அண்மையில் களுத்துறை மாவட்டம், அளுத்கமப் பகுதியில் கடும்போக்கு பௌத்த அமைப்பு என்று கருத்தப்படும் பொதுபல சேனாவுக்கும், உள்ளூர் முஸ்லிம்களுக்கும் இடையே
ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அரசின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டதில், பசில் ராபக்‌ஷ, மைத்ரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, பௌசி உட்பட பல அமைச்சர்கள் பங்குபற்றினர். பௌத்த மதத் தலைவர்களும் பங்குபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், மத ஒற்றுமை ஏற்பட்டு இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் பௌசி பி.பி.சி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலரின் மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சே அளுத்கமப் பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு காரணம் என்றும் அமைச்சர் பௌசி கூறுகிறார். இதனிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, இன்று நாடாளுமன்றத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அமைச்சர்களும் கோரினர் என்று அமைச்சர் பௌசி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக