செவ்வாய், 24 ஜூன், 2014

திறனை வெளிக்காட்ட விளையாட்டுத்துறையை பயன்படுத்துவோம் என்கிறார் முதலமைச்சர்...!!!

"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் மற்றைய பகுதிகளில் இருந்து முற்றாக வேறுபட்டவை. நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் எமது சவால்களும் கூட வேறுபட்டவையே. அதை நாம் அரசியல் ரீதியாகத் தெரிவித்து வருகிறோம்."

"அது போலவே எமது தகைமைகளும் திறன்களும் கூட வேறுபட்டவை. அதை நாம் அகில இலங்கை ரீதியாகக் கட்டுவதற்கு விளையாட்டுத்துறை நல்ல வாய்ப்பாக அமையும்." -
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண கல்வி வலயங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று முற்பகல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த ஆரம்ப வைபவத்தில் வடமாகாண சபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கே.வி.தவராஜா, மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன், முன்னாள் ஒலிம்பிக் மெய்வன்மை வீரர் என்.எதிர்வீரசிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் ஒலிம்பிக் தீப்பந்தத்தை எதிர்வீரசிங்கம் ஏற்றி மெய்வன்மைப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

 எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறும். அன்றைய தினம் நடைபெறும் இறுதிநாள் நிகழ்ச்சிகளில் எதிர்வீரசிங்கமே பிரதம விருந்திரனாகக் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையில் மாகாண முதலமைச்சர் மேலும் கூறியவை வருமாறு:- வடக்கு மாகாணம், விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் அடைந்தே வருகின்றது. கடந்த வருடங்களின் தேசிய மட்டப் போட்டிகளின் பெறுபேறுகள் அதை வெளிப்படுத்தி வருகின்றன.

கடந்த காலங்களில் எமக்கு ஏற்பட்ட அழிவுகள், பாதிப்புக்கள், அனர்த்தங்களை ஏனைய பிரதேசங்கள் எதிர்கொள்ளவில்லை. எமது பிரச்சினைகளும் அவற்றுக்கான பரிகாரங்களும் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறானவை. போரில் துவண்டு போன எமது சமுதாயம், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் மேலெழுந்து வலுப்பெறும்; அதற்கு முனைப்புடன் செயலாற்றும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை - வாய்ப்பை - விளையாட்டுத்துறை தந்திருக்கின்றது. அதை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும். - என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக