திங்கள், 25 அக்டோபர், 2010

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த லான்ட்மாஸ்ரர்களை அரசு சிங்கள மக்களுக்கு வழங்கியது..!

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த இருசக்கர உழவு இயந்திரங்களில் (லான்ட்மாஸ்ரர்கள்) ஒரு பகுதியை அரசாங்கம் சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 470 பேருக்கு இருஷக்கர உழவு இயந்திரங்களை வழங்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வவுனியா மாவட்டத்துக்கு 102 இரு ஷக்கர உழவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான பயனாளிகளையும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவே தெரிவு செய்தது. ஆனால் தாம் தெரிவுசெய்தவர்களுக்கே உழவு இயந்திரங்களை வழங்கவேண்டும் என்று அரச உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களால் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிற்குக் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இல்லையேல் உழவு இயந்திரங்களை எவருக்கும் வழங்க அனுமதி வழங்கமுடியாது என்று கடுந்தொனியில் அறிவுறுத்தப்பட்டார்கள் என அறியவருகிறது. இதன்பின்னர் அரச தரப்பினர் தெரிவுசெய்த பயனாளிகளுக்கே இரு ஷக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் அனைத்தும் வவுனியா வடக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கே முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அரசின் தலையீட்டை அடுத்து வெலிஓயா மற்றும் வவுனியா தெற்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன. இரு இடங்களுக்கும் தலா 25 உழவு இயந்திரங்கள் வீதம் 50 உழவு இயந்திரங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கெலபகஸ்வெள, ரங் கெத்கம, ஒசுடப்பிட்டிய, அவரந்தலாவ பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கே இவை பகிர்ந்தளிக்கப்பட்டன இதன் காரணமாக வவுனியா வடக்கைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கு 52 உழவு இயந்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. அரசின் அமைச்ஷர் ஒருவர் மற்றும் வடக்கு மாகாண அரச உயர் பிரதிநிதி ஆகியோரின் இந்தத் தலையீட்டால் ஏமாற்றமடைந்த செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் வவுனியா கிளை அதிகாரி மேரிஸ் லிமோனார் தேம்பித் தேம்பி அழுதார் என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் கடந்த 18ஆம் திகதி நிகழ்ந்த "லான்ட்மாஸ்ரர்' கையளிப்பு நிகழ்வில் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் கலந்து கொண்டனர். இதேவேளை, இந்தத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி விவசாயிகளுக்கு 189 "லான்ட்மாஸ்ரர்'களும் முல்லைத்தீவு விவசாயிகளுக்கு 150 "லான்ட்மாஸ்ரர்'களும் வழங்கப்பட்டுள்ளன. மன்னார் விவசாயிகளுக்கு130 "லான்ட்மாஸ்ரர்'கள் 28ம் திகதி வழங்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக