சிகிரியா ஓவியங்களைப் பழுதாக்கும் சிறிய உயிரினங்களை அழிப்பதற்கு இரசாயனக் களைகொள்ளியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை நான்கு வகையான உயிரினங்கள் இனம் காணப்பட்டன எனவும் அவை சித்திரங்கள் உள்ள இடத்திற்கு வருவதைத் தடைசெய்வதன் மூலம் சித்திரங்களைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறப்பட்டது. அவற்றை அழிப்பதால் சிதிதரங்களுக்கு ஆபத்து ஏதுமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சிகிரியா ஓவியங்களுக்கு ஒருவகை சிறிய உயிரினங்களால் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை காணப்படுவதாகத் தம்புள்ளை பிரதேச சபை வட்டாரங்கள் முன்னர் தெரிவித்தன. இதுவிடயமாக உடன் நடவடிக்கை எடுக்காவிடில், சரித்திரப் புகழ்மிக்க சிகிரியா ஓவியங்கள் அழிவுறும் அபாய நிலை தோன்றலாம் எனச் சுற்றாடல் அமைப்புக்கள் அச்சம் தெரிவித்தன. சுற்றுலா வழிகாட்டியாகக் கடமையாற்றும் சமன் மொரவெல என்பவரே, இதுவிடயத்தை முதன்முதலாகத் தம்புள்ளைப் பிரதேச சபைக்கு அறிவித்திருந்தார்.தம்புள்ள பிரதேச சபைத் தலைவர் கே.பி.சோமதிலக, உபதலைவர் ஜாலியா ஒபாத, எதிரணித்தலைவர் ஏ.பீ.சிரிசேன உட்பட பிரதேச சபை அங்கத்தவர்கள் பலர் நேரில் சென்று நிலைமையை அவதானித்த பின் ஒருவகை சிறிய உயிரினத்தால் இச்சித்திரங்கள் அழிக்கப்படும் அபாயம் பற்றி உறுதிசெய்தனர்.கருப்பு மற்றும் பச்சைநிற பூச்சி இனமும் கரையான் போன்ற ஒருவகைப் பூச்சி இனமுமே இவ்வாறு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைவிட சுவர், சித்திரங்களுக்குக் காட்டுக் குரங்குகளாலும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவிடயமாக உடன் குழுவொன்றை அனுப்பி நிலைமையை அவதானிக்க உள்ளதாக புதை பொருள் மற்றும் புராதன இயல் உதவிப் பணிப்பாளர் டி.டி.விஜேபால தெரிவித்தார்.அத்துடன் சிகிரியாவைப் பார்வையிடவருபவர்களுக்கான சட்டதிட்டங்களும் புதிதாக வெளியிடப்படவுள்ளன. புகைப்படம் எடுத்தல், சுவரைத்தொடுதல் போன்றவை தடைசெய்யப்படவுள்ளன. சித்திரங்களைத் தொடுவதால் நிறம் பாதிப்படையலாம் என்பதாலேயே தடையுத்தரவு விதிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக