
தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சென்றவர்களே அரசாங்கத்துடன் இணைந்துள்ளார்கள். ஆனாலும் நாங்கள் தமிழ்மக்களுடைய எதிர்கால நலனுக்காக ஒற்றுமையை பேணிபாதுகாத்து வருகின்றோம் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நடைபெறபோகும் பொதுத் தேர்தலின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுக்காலை வவுனியா செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல்செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எவ் கட்சிகள் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். புளொட் அமைப்பினரை எம்முடன் இணைப்பது தொடர்பாக பல சந்தர்ப்பங்கள் இருந்தது. நாமும் அவர்களும் ஆவலுடன் இருந்தோம் சில நடைமுறை சிக்கல் சந்தர்ப்பம் காரணமாக சாத்தியமாகாதது குறித்து மனவேதனைப்படுகின்றேன். தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னிச்சையாக இந்த தேர்தலை சந்திக்கவுள்ளது எமது மக்களுடைய அரசியல் தீர்வு விடயமாகவும் அவர்கள் எதிர்நோக்குகின்ற சூழலில் எமது மக்களை தூக்கிவிடுகின்ற பொறுப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பு கொண்டிருக்கின்றபடியாலும் மக்களுடைய நலன்கருதி நாம் ஆளுமையுடன் செயல்படுவோம் என குறிப்பிட்ட அவர், தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை, என்ற அடிப்படையில் எமது தீர்வு அமைவதற்கு நாம் அரசுடன் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக