திங்கள், 15 பிப்ரவரி, 2010

பொதுத் தேர்தலுக்கு முன்பதாக அனைவரையும் மீளக்குடியமர்த்த நடவடிக்கை..!

பொதுத் தேர்தலுக்கு முன்பதாக வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்துள்ளார். மீளக்குடியமர்த்தப்படுவதற்காக வவுனியா நிவாரணக்கிராமங்களில் தற்போது சுமார் 70ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உள்ளனர். இவர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்துவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட அரசஅதிபர்களுடன் இணைந்து துரிதகெதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இவ்வாரத்தினுள் மாத்திரம் 2500 பேர் மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அரச அதிபர தெரிவித்துள்ளார். மூன்று தினங்களுக்கு ஒருமுறை என்ற வகையில் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மெனிக் பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் 350 குடும்பங்களைச் சேர்ந்த 1000பேர் எதிர்வரும் 18ம் திகதி நெடுங்கேணி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். அதேவேளை 700பேர் பச்சிளைப்பள்ளி, பளை நகரம், தில்லிவளை கிழக்கு மற்றும் மேற்கு, முள்ளியடி ஆகிய பகுதிகளிலும் மேலும் 230குடும்பங்களைச் சேர்ந்த 800பேர் குமரபுரம் மற்றும் உமங்களபுரம் ஆகிய பகுதிகளிலும் இவ் வாரத்துக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக