
யுத்தகாலத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிரிழந்திருப்பதையிட்டு மிகவும் மனம் வருந்துவதாகத் தெரிவித்த எதிரணியின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகா, இராணுவ அதிகாரி என்ற ரீதியிலேயே தனது கடமையை மேற்கொண்டதாகக் கூறியதுடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி சகல இனமக்களும் சமவுரிமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவேன் என்று வாக்குறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா, வீரசிங்கம் மண்டபத்தில் குழுமியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும்போது பல உறுதிமொழிகளை அளித்துள்ளார். பலாலியை சர்வதேச விமான நிலையமாக மாற்றுதல், பருத்தித்துறை துறைமுகத்தை சகல வசதிகளுடன்கூடிய துறைமுகமாக மாற்றுதல், குடாநாட்டின் உள்சார் கட்டமைப்பை சீரமைத்தல், அதி உயர் பாதுகாப்பு வலயத்தை படிப்படியாக நீக்கியும் அவசர காலச்சட்டத்தை உடனடியாக அகற்றியும் இயல்புநிலையை ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக நம்பிக்கையூட்டும் விதத்தில் அவர் உரையாற்றியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக