சனி, 2 ஜனவரி, 2010

நாடெங்கும் புத்தாண்டு மகிழ்ச்சி கொண்டாட்டம்: 30 ஆண்டுகளின் பின் வடக்கு, கிழக்கில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம்..!!

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் நாடெங்கும் மக்கள் நேற்று புத்தாண்டை வெகுவிமர்சையாகக் கொண்டாடினர்.வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் பட்டாசுகள் கொளுத்தியும் வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் புதுவருடத்தை வரவேற்றனர். நேற்று நள்ளிரவு முதலே பட்டாசு சத்தங்கள் காதுகளைப் பிளந்தன. இன, மத பேதமின்றி சகல மக்களும் விழித்திருந்து புதிய ஆண்டை கோலாகலமாக வரவேற்றதுடன் சகல மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.கொழும்பில் வழமைக்கு மாறாக இம்முறை பட்டாசுகள் கொளுத்தப்பட்டு பெரும் வானவேடிக்கைகளும் இடம் பெற்றன. கொழும்பு காலி முகத்திடலில் கூடிய மக்கள் மிகுந்த சந்தோசத்துடன் பட்டாசுகளைக் கொளுத்தி புதிய வருடத்தை வரவேற்றனர். கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தானம் உட்பட இந்து ஆலயங்களில் நள்ளிரவு மற்றும் விடியற்காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. கொழும்பில் தெவட்டகஹ பள்ளிவாசல், கொம்பனித்தெரு குழந்தை இயேசு ஆலயம், கங்காராம விகாரை உட்பட சகல மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட சமய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.குறிப்பாக கடந்த முப்பது வருடகாலத்திற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் மக்கள் புதுவருடத்தைச் சிறப்பாகக் கொண்டாடினர். வடக்கு, கிழக்கின் சகல பிரதேசங்களிலும் விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மக்கள் ஆர்வத்துடன் இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர். மூன்று தசாப்தங்களுக்கு மேல் யுத்தம் இடம்பெற்ற இப்பிரதேசங்களில் வெடிச்சத்தங்களுக்குப் பதிலாக இம்முறை பட்டாசு சந்தங்கள் கேட்டன. மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் புதுவருடத்தை வரவேற்றமையைக் காணமுடிந்தது.இதேவேளை நேற்றுக்காலை 6 மணியுடன் முடிந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களில் 203 பேர் காயமடைந்து கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளதுடன் 36 பேர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.எவ்வாறெனினும் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை வாகன விபத்துக்கள், எரிகாயங்கள் குறைந்துள்ளதாக வைத்தியசாலையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். கடந்த வருடம் புதுவருடத்தில் 46 பேர் எரிகாயங்களுக்குள்ளாகியதுடன் இம்முறை 25 பேரே வெடிகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார்.அத்துடன் பொலிஸ் பொது மக்கள் பிரிவு ஏற்பாட்டுக்கமைய மக்கள் இணைந்த மும்மத வழிபாடுகள் இம்முறை புத்தாண்டு தினத்தில் நடைபெற்றன. மும் மதத்தினரும் இணைந்து இவ்வழிபாடுகளில் பங்கேற்றமை விசேட அம்சமாகும்.புத்தாண்டை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல கலை கலாசார இசை நிகழ்ச்சிகள் நேற்று அதிகாலை வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக