திங்கள், 26 மே, 2014

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கைது செய்யப்பட்டமைக்கு சிறீதரன் கண்டனம்!!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் இரவோடிராவாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினரால் ஜனநாயக
ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இம்மாதம் 26ம் நாள் நடத்தப்பட இருந்த நிலையில் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் இரவோடிராவாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொட்பாக பா.உறுப்பினர் சி.சிறீதரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கில் மக்கள் அமைதியுடன் இருப்பதாகவும், உரிமைகளுடன் வாழவதாகவும் பேசுகின்ற அரசாங்கம், நாளுக்கு நாள் தமிழ் மக்களின் நிம்மதியை மீண்டும் போர் முடிந்த பின்பும் மீண்டும் இல்லாதொழித்து வருகின்றது.

கைதுகள் ஏராளம் நடக்கின்றன. ஒன்று கூடும் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் மிகமோசமாக மறுக்கப்படுகின்றது. அத்தகையதோர் அடக்கு முறையின் வெளிப்பாடுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சியில் கிளையால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனீயீர்ப்பு போராட்டம் இலங்கை அரசாங்கத்தால் தடுக்கப்பட்டமையும் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கைதுசெய்யப்பட்டமையும்.

இத்தகைய சூழல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருப்பதற்காக தமிழ் மக்களின் அடிப்படைச் சுதந்திரங்களில் கைவைக்கின்றது. போர்க்காலம் போல இராணுவம் வீடுவீடாக சீருடைகளுடன் ஆயுதங்களுடன் அலைகின்றது. ஊர்கள் சுற்றி வளைக்கப்படுகின்றன. வயது வேறுபாடுகள் இன்றி கைதுகள் தொடர்கின்றன.

ஆகவே தமிழர் நிலத்தில் தனது ஆக்கிரமிப்புத் தனத்தின் அச்சமான சூழலை வைத்திருப்பதன் மூலம் தமிழர்களின் உரிமைக்கான ஜனநாயக போராட்டங்களையும் வேரோடு சாய்க்க அரசாங்கம் எண்ணுவதையே அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

மிகவும் கண்டிக்கத்தக்க அரசாங்கத்தின் இத்தகைய ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகள் இலங்கையில் நல்லிணக்கத்திற்கு பதிலாக இலங்கைக்கு மீண்டும் ஒரு இருண்ட காலத்தையே உண்டாக்கும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என மேலும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தனது அறிக்கையில்; தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக