திங்கள், 26 மே, 2014

நீதிமன்ற அறிவிப்புக்களை உதாசீனம் செய்வது மன்னிக்க முடியாத குற்றம் - யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவிப்பு!!

யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் அறிவித்தல் மற்றும் ஆவணங்களை உதாசீனம் செய்த ஒருவரை எச்சரிக்கை செய்து 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 23ஆம் திகதி யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிரேம்சங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கொன்றிற்கு சமுகமளிக்குமாறு மன்றின் கட்டளைச் சேவகர் ஊடாக வழங்கப்பட்ட அழைப்புக் கட்டளையை பெறுவதனைத்
தவிர்க்கும் முகமாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த மாதம் 8 ஆம் திகதி உரும்பிராயைச் சேர்ந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த 23ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த பெண் குற்றவாளி என இனங்காணப்பட்டார்.

அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பின்போது கருத்துத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் - நீதிமன்றினால் பிறப்பிக்கப்படும் அறிவித்தல்கள், அழைப்புக்கட்டளைகளைப் பெற்று, உரிய சட்ட ஆலோசனைகளை அறிந்து வழக்கிற்கு முகம் கொடுப்பதனைத் தவிர்ப்பதும் நீதிமன்ற ஆணைகளைத் தவிர்க்கும் முகமாக விலாசத்தினை மாற்றுதல் மற்றும் கட்டளை சேவகர்களை தரக்குறைவாக நடாத்துவதும் மன்னிக்க முடியாத செயற்பாடு என்றார்.அவ்வாறான நபர்கள் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நீதிபதி குறிப்பிட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக