வேலணை, செட்டிக்குளம் பகுதியில் கடற்றொழில் பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பலர் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு அவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. இவ்வாறு கைப்பற்றி அழிக்கப்பட்ட வலைகளின் பெறுமதி சுமார் 3 இலட்சம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கூசி வலைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை அழிக்குமாறு
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார். வேலணைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைச் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி அதிகமானவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் கடற்றொழில் பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனார்.
வேலணை, அம்பிகைநகர், செட்டிக்குளப் பகுதிகளில் தேடுதல் இடம்பெற்றது. இதன்போது செட்டிக்குளம் பகுதியில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய ஏராளமான தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டன. வலைகள் தொடர்பில் யாரும் உரிமை கோராததால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக