ஊவா மாகாணசபைத் தேர்தல் ஜுன் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பில் ஆராயும் முக்கிய கூட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊவா மாகாண தொகுதி அமைப்பாளர்களுக்கும், மாகாணசபை
உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
தேர்தலையொட்டி முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், மாகாண கலைப்புத் திகதி, கள ஆய்வு, பிரசார வியூகம் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன என்றும், தொகுதி அமைப்பாளர்களின் ஆலோசனையும் கேட்டறியப்படவுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவே, மக்களின் நிலைப்பாட்டை அறியும்பொருட்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அரசு ஊவா மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மாகாண சபை கலைப்புக்கு முன்னரே தேர்தலைக் குறிவைத்து சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அக்கட்சியின் மொனராகலை மாவட்டத்துக்குப் பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.
அத்துடன், ஜே.வி.பி., ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு ஆரம்பக்கட்ட பணிகளை இம்மாத ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளன. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக இறங்கியுள்ளது.
தெற்கில் போன்று ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் இம்முறை பல முனைப்போட்டி நிலவும் என்பதால், மாகாணசபை கலைப்புக்கு முன்னரே தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணசபையில் இ.தொ.காவின் செந்தில் தொண்டமான், ஐ.தே.கவின் உறுப்பினர் கே.வேலாயுதம், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் அரவிந்தகுமார் ஆகிய மூன்று தமிழ் உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை மேலும் தமிழ் வேட்பாளர்கள் சிலர் களமிறங்கவுள்ளதால் தமிழ் வாக்குகள் சிதைவடையும் அபாயம் இருக்கின்றது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்து, அதனை அதிகரித்துக்கொள்ளவேண்டியது தமிழ்க் கட்சிகளின் பொறுப்பாகும் என்றும், அதற்கேற்றவாறு தேர்தல் வியூகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் மலையக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
ஊவா மாகாணத்துக்குட்பட்ட மொனராகலை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்தும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில், 4 இலட்சத்து 18 ஆயிரத்து 906 வாக்குகளைப் பெற்று இரண்டு போனஸ் ஆசனங்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு 25 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடியது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகளைப்பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியது. மலையக மக்கள் முன்னணி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் தலா ஓர் ஆசனம் வீதம் கைப்பற்றின. தனித்துக் களமிறங்கிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆயிரத்து 150 வாக்குகளைப் பெற்றாலும் ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக