சனி, 28 பிப்ரவரி, 2015

அரசியல் பழிவாங்கல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்கிறார் மகிந்த ராஜபக்ச..!!

அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களின் மனைவிமாரும் பிள்ளைகளும் இந்த அரசாங்கத்திடம் கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் இந்த பழிவாங்கும் அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி ஷசி வீரவன்ஸ உடல் நலன் குறித்து விசாரிப்பதற்காக   கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று வெளியேறும் போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.


பழி வாங்கும் அரசியல் மிகவும் தவறானது எனவும் தான் அப்படி எவரையும் பழிவாங்கவில்லை எனவும் அந்த விடயத்தில் எவருக்கும் தன் மீது குற்றம் சுமத்த முடியாது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தன் மீது எவரும் குற்றங்களை சுமத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். சேறுபூசும் பிரச்சாரங்களை முன்னெடுத்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது கவலைக்குரியது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எவரையும் பழிவாங்கவில்லை எனக் கூறினாலும், 2010 ஆம் ஆண்டு தன்னை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து அவரது பிள்ளைகள் உட்பட குடும்பத்தினருக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தனக்கு எதிராக செயற்படும் நபர்களையும் அவர் அரசியல் ரீதியாக பழிவாங்கியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக