ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சாட்சியமளிக்குமாறு படையினர் ஊக்குவித்தனர்: ஆணைக்குழுவின் அப்பட்டமான பொய்!!

காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது படையினர் தலையீடு செய்தமை தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டிருக்கும் கருத்தினை ஆணைக்குழு முற்றாக மறுத்துள்ளதுடன், மக்களை சாட்சியளிக்குமாறு படையினர் ஊக்குவித்ததாகவும் கூறியுள்ளது.
மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைகள் பூநகரி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தபோது படையினர் மக்களுடைய வீடுகளுக்குச் சென்று மக்களை புலிகளுக்கு எதிராகச் சாட்சியமளிக்குமாறு வற்புறுத்தியதுடன், மக்களை வாகனங்களில் ஏற்றிவந்தும் இறக்கினர்.

அவ்வாறு ஏற்றிவரப்பட்ட மக்கள் பின்னர் பேருந்தில் செல்வதற்கும் கூட
பணம் இல்லாமல் வீதியில் நின்ற கதையும் நடந்தது.

இந்நிலையில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் நடமாட்டம் சாட்சிகளை அச்சுறுத்துவதற்கும், கடந்தகால வன்முறைகள் குறித்த கருத்துக்களை வெளியிட்டால் பழிவாங்கப்படுவார்கள் என்ற கருத்தினையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக மாற்றுக் கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், நேற்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் கவலையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கூற்றினை ஜனாதிபதி ஆணைக்குழு முற்றாக நிராகரித்துள்ளது.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எங்கள் ஆணைக்குழுவில் எவ்வாறேனும் சாட்சியமளியுங்கள் என படையினர் ஊக்குவித்தனரே தவிர சாட்சியமளியுங்கள் என படையினர் மக்களை அச்சுறுத்தவில்லை.

மேலும் பழிவாங்கும் நொக்கில் சுதந்திரமான கருத்துக்களுக்கு இடையூறு விளைவிக்கவுமில்லை. மேலும் இவ்வாறான முறைப்பாடுகள் எவையும் எமக்கு கிடைக்கவில்லை.

படையினர் ஊக்குவித்தமையினாலேயே அதிகளவான மக்கள் சாட்சியமளிப்பதற்காக அன்றைய தினம் ஆணைக்குழுவிற்கு வருகைதந்து சாட்சியம் வழங்கியிருந்தனர்.

மேலும் சில ஊடகங்களில் இவ்வாறு இராணுவம் நிற்பதாக செய்திகள் ஒளிப்படங்களுடன் வெளியாகின ஆனால் அவை உன்மையானவை அல்ல.

அந்த வழியால் ரோந்து சென்ற படையினரே அவ்வாறு நின்றனர். மேலும் அவர்கள் வழக்கமாக வந்து செல்பவர்கள் என ஆணைக்குழு கூறியிருக்கின்றது. ஆனால் அன்றைய தினம் பிரதேச செயலக வளாகத்திற்குள்ளும் வெளியேயும் படையினர் அதிகளவில் நின்றதும், மக்களை படையினரின் வாகனங்கள் ஏற்றிவந்ததும், புலனாய்வாளர்கள் சாட்சியாளர்களை தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டதும் நடந்த உண்மை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக