வியாழன், 21 அக்டோபர், 2010

கனடாவுக்கு அகதிகள் வருவதை தடுக்க புதிய சட்டமூலம்..!

கனடாவுக்கு அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருவதை தடுப்பதற்காக புதிய சட்டமூலத்தை இன்று அந்நாட்டு அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் எம்.வி.சன்சீ கப்பலில் 492 தமிழர்கள் வருகை தந்ததையடுத்து புதிய சட்டமூலத்தை கொண்டு வருவது தொடர்பாக கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசு ஆராய்ந்தது. ஒட்டாவாவில் பிரஜாவுரிமை தொடர்பான வைபவமொன்றில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றிய கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் தனது அரசாங்கம் வலுவான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். ஆட்கடத்தல்மூலம் பெரும் எண்ணிக்கையானோர் கனடாவை வந்தடைவது மிகவும் குழப்பகரமான தன்மை என்றும் முறைமையை பாதிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். கனடாவில் வசிக்க விரும்புவோரை திரும்பிச் செல்வதற்கான வலுவான ஊக்குவிப்பை புதிய சட்டங்கள் வழங்கும் என்றும் நியாயபூர்வமான முறையில் பிரவேசிப்பதற்கான தன்மையை முன்னெடுக்கக் கூடியதாக அமையுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். அரசு உரிய முறையில் செயற்படத் தவறினால் முறைமைகளில் கனடியர்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அகதிகள் தொடர்பான ஐ.நா.சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள கனடாவானது தனது நாட்டிற்குள் வந்து சேரும் சகல அகதிகளின் விண்ணப்பங்களையும் பரிசீலிப்பது அவசியமானதாகும் என்று ஏ.பி.சி.செய்திச் சேவை தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக