செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுக்கு சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர்-முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்..!

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுக்கு சரியான பாடத்தைப் புகட்டியிருப்பதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்த வடக்கு, கிழக்கு மக்களைப் பழிவாங்கும் படலத்தை அரசு முடுக்கிவிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கில் கடற்றொழிலில் ஈடுபடும் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் மீண்டும் பாஸ் நடைமுறையை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளனர். இது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தமது தொழிலைத் தொடரமுடியாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இரவுகாலங்களில் மீன்பிடிக்கத் தடைபோடப்பட்டுள்ளது. மீண்டும் அதிகாலை 4மணிமுதல் இரவு 8மணிவரை மட்டுமே தொழிலுக்குச் செல்லமுடியும். இவ்வாறான நெருக்குவாரங்கள் அந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படியான தரக்குறைவான அரசியலிலீடுபட்டு மக்களைக் கொடுமைப்படுத்தும் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கம் எடுத்திருக்கும் இந்தத் தவறான முடிவை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். வட, கிழக்கில் தமது அனுசரணையுடன் செயற்பட்ட ஆயுதக் குழுக்களிடமிருந்து உடனடியாக ஆயுதங்களைக் களையவேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து உரிய நடவடிக்கை எடுப்பதன்மூலம் அரசு நியாயமாக நடப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதேவேளை, அரசு அவசர அவசரமாக யாப்புத் திருத்தத்துக்கும் தயாராகி வருகின்றது. அதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள்மீது அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது சுடுகிறது மடியைப் பிடி என்ற விதத்தில் அரசு செயற்படுவதாகவே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறாக இருப்பினும் இதனைப் பரிசீலிக்க எதிரணி தயாராகவுள்ளது. ஆனால், அதிகார தோரணையில் காலக்கெடு விதிப்பதை எதிரணி ஏற்றுக்கொள்ளவோ, அலட்டிக்கொள்ளவோ போவதில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவை கேள்விக்குறியாக்கியுள்ளது. கிழக்கு மாகாணசபை அதிகாரம் சட்டப்படி செல்லுபடியற்றதென்பதை அந்த மக்கள் அறிவித்துவிட்டார்கள். இன்று நாம் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைப் பலப்படுத்த ஒன்றுபட்டுள்ளோம். அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் புரிந்துணர்வுடன் செயற்பட முடிவெடுத்துள்ளோம். பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் போட்டியிடலாம். ஜே.வி.பி. கூட இணைய முடியும். ஆனால், வடக்கு,கிழக்கில் நாம் எவ்வாறு போட்டியிட்டாலும் அது தமிழ், முஸ்லிம் நல்லுறவைப் பாதிக்காத விதத்தில் நாம் அவதானமான முறையிலேயே செயற்படுவோம் எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக