புதன், 3 பிப்ரவரி, 2010

எமது தாய்நாட்டின் 62வது சுதந்திரதின அகவையில் எமநாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் பேரானந்தம் அடைகின்றேன்- கிழக்கு மாகாண முதலமைச்சர்..!

எமது இவ் அழகிய தேசமானது பிரித்தானிய சாம்ராஜ்யத்திலிரந்து சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் கழிந்து அதற்கான கொண்டாட்டங்களில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம். எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக எமது அரசியல் முன்னோடிகள் இன மத மொழி ரீதியான வேறுபாடுகள் இல்லாமல் ஒரே இலங்கையர் என்ற கோட்பாட்டில் கரம் கோர்த்துச் செயற்பட்டதனாலேயே சுதந்திரக் கனவு நனவாகியது.
சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரே இலங்கையர் என்ற கோட்பாட்டில் ஒன்றிணைந்து செயற்பட்ட மக்களிடையே சுதந்திரத்திற்கு பின்நாளில் வேற்றுமைகளும் அரசியல் ரீதியான பிரிவுகளும் ஏற்பட்டமை துரதிஷ்ட்டமே. அனைவரும் ஒன்றிணைந்து பெற்றெடுத்த சுதந்திரத்தை இந்நாட்டின் குடி மக்களான சிறுபான்மையின தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்தமை வேதனைக்குரிய விடயமாகும். அதன் பின்னர் ஏற்பட்ட ஆயுதப் போராட்டம் இழப்புக்கள், அழிவுகள் என்பன நாட்டின் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்கி இறைமைக்கு பெரும் சவாலாக அமைந்தது.
பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அரிய வாய்ப்பு எமக்கு கிட்டியுள்ளது. ஆனால் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. இவை முழுமையாக தீர்க்கப்பட்டு இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அரசியல் பொருளாதார ரீதியிலும் சம உரிமை பெற்று வாழும் நிலை உருவாகும் போதே நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் ஜதார்த்த நிலை உறுதிப்படுத்தப்படும். இதனை தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் மேற்கொள்ளும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்கு உண்டு.சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து எம் நாட்டு பிரஜைகளுக்கும் எனது இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சிவநேசதுரை சந்திரகாந்தன்,முதலமைச்சர்,கிழக்கு மாகாணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக