சனி, 12 டிசம்பர், 2009

பிரபல பாடகியான மாதங்கி M.I.Aவின் தந்தையான ஈரோஸ் அருளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சாத்தியக்கூறு !

எதிர்வரும் ஜனவரிமாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர் என்கிற அருட்பிரகாசம் அவர்கள், தமிழ்க் அமைப்புக்களின் சார்பாக போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்விடயத்தினை நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மனித உரிமைகள் தினம் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள அனைத்துத் தமிழ் கட்சிகளின் தலைவர்களிடமும் ஏற்கனவே அருளர் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்து “அதிரடி” இணையதளமானது அருளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இத்தகவல் உண்மையெனவும், இதுபற்றி தான் அனைத்துத் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யாழ். மனித உரிமை நிகழ்வுகளைத் தொடர்ந்த அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து பேசி இதுபற்றிய தீர்மானத்தை தெரிவிப்பார்களென தான் நம்புவதாகவும் கூறியுள்ளார். நாளை நடைபெறவுள்ள மனித உரிமைகள் தின நிகழ்வுகளில் பங்கேற்க யாழ்ப்பாணம் செல்லும் தான் தனது முடிவைப் பற்றி யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போமெனவும் தெரிவித்துள்ளார். அருளர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது போட்டியிட முயற்சித்தவர் என்பதுடன் அச்சுறத்தல் காரணமாக போட்டியிடுவதைத் தவிர்த்து மீண்டும் வெளிநாடு சென்றவரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது மகளான பிரபல பாடகியான மாதங்கி M.I.A கடந்த காலங்களில் தனது பாடல்களின் ஊடாக புலிகளுக்கான தீவிர பிரச்சார நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்தவரென்பதுடன், மாதங்கி தற்போது மைக்கல் ஜெக்சன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக